புதன், 22 டிசம்பர், 2010

தேவதாயாருக்கு தன்னை ஒப்புக்கொடுக்கும் செபம்.


தேவதாயாருக்கு தன்னை ஒப்புக்கொடுக்கும் செபம்.

என் ஆண்டவளே, என் தாயாரே, இதோ என்னை முழுவதும் உமக்கு பாதகாணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். உமதுபேரில் அடியேன் வைத்த பக்தியைக் காண்பிக்கத்தக்கதாக இன்று எனது கண், காதுகளையும், வாய், இருதயத்தையும் என்னை முழுவதும் உமக்கு பாதகாணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். என்நல்ல தாயாரே, நான் உமக்குச் சொந்தமாயிருக்கிறபடியால் என்னை உம்முடைய உடைமையாகவும், சுதந்திரப் பொருளாகவும் ஆதரித்துக் காப்பாற்றியருளும். ஆமென்.

மரியாயே என் நல்ல தாயாரே, இந்த நாளிலே, இந்த இரவிலே என்னைச் சடுதி மரணத்திலும், சாவான பாவத்திலும் நின்று காத்துக்கொள்ளும்.(மூன்று முறை சொல்லவும்)


 அடைக்கலச் செபம்.

சருவேசுரனுடைய பரிசுத்த மாதாவே, இதோ உம்முடைய அடைக்கலமாய் ஓடிவந்தோம். நாங்கள் எங்கள் அவசரங்களிலே வேண்டிக்கொள்வதற்கு தாயே நீர் பாராமுகமாயிராதேயும், ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்ச மகிமை உடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே சகல ஆபத்துகளிலும் நின்று தற்காத்துக்கொள்ளும். ஆமென்.

தேவதாயின் அடைக்கலச்செபம்.

தேவதாயின் அடைக்கலச்செபம்.
மிகவும் இரக்கமுள்ள தாயே, இதோ அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகாரங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுகளின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மாற் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகிற் கேள்விப்பட்டதில்லை என்றதை நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே தயவுள்ள தாயே, இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டிவருகிறேன். பெருமூச்செறிந்தழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குத் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே, என் மன்றாட்டைப் புறக்கணியாமற் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும், ஆமென்.

தேவதாயாரின் மன்றாட்டுகள்

கிருபை தயாபத்து செபம்.

கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க ஃ எங்கள் சீவமே எங்கள் மதுரமே எங்கள் தஞ்சமே வாழ்க ஃ பரதேசிகளாய் இருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள் உம்மைப் பார்த்துக் கூப்பிடுகிறோம் ஃ இந்தக் கண்ணீர்க் கணவாயிலிருந்து பிரலாபித்து அழுது ஃ உம்மையே நேக்கிப் பெருமூச்சு விடுகிறோம் ஃ ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே ஃ உம்முடைய தயாபரமுள்ள திருக்கண்களை எங்கள் பேரிலே திருப்பியருளும் ஃ இதுவன்றியே நாங்கள் இந்தப் பிரதேசம் கடந்த பிற்பாடு ஃ உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை ஃ எங்களுக்குப் பெற்றுத் தந்தருளும் ஃ கிருபாகரியே தயாபரியே ஃ பேரின்பரசமுள்ள கன்னி மாமரியே ஃ சருவேசுரனுடைய பரிசுத்த மாதாவேஃ

முதல்:இயேசுக் கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி ஆகுதற்காக,

துணை: சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே, எங்களுக்காக   வேண்டிக் கொள்ளும்.

திருப்பலிப் பாடல்கள்


தீர்த்தம் தெளித்தல் (பொதுக்காலம்)

ஆண்டவரே ஈசோப் புல்லினால் என்மேல் தெளிப்பீர்;
நானும் தூய்மை ஆவேன்.
நீரே என்னைக் கழுவ நானும்
உறைபனி தனிலும் வெண்மையாவேன்.

  இறைவா உமது இரக்கப் பெருக்கத்திருக்கேற்ப
  என்மேல் இரக்கம் கொள்ளுவீர்.

  பிதாவும் சுதனும் தூய ஆவியும்
  துதியும் புகழும் ஒன்றாய்ப் பெறுக.
  ஆதியில் இருந்தது போல்
  இன்றும் என்றும் நித்தியமாகவும் -  ஆமென்.
 
தீர்த்தம் தெளித்தல் (பாஸ்குகாலம்)

தேவாலய வலப்புறமிருந்து
தண்ணீர் புறப்படக் கண்டேன் - அல்லேலூயா.

அந்தத் தண்ணீர் யாரிடம் வந்ததோ
அவர்கள் யாவருமே
ஈடேற்றம் பெற்றுக் கூறுவர்:
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா.

ஆண்டவரைப் போற்றுங்கள்
ஏனெனில் அவர் நல்லவர்;
அவர் தம் இரக்கம் என்றென்றும் உள்ளதே;
பிதாவும் சுதனும் தூய ஆவியும்
துதியும் புகழும் ஒன்றாய் பெறுக,

ஆதியில் இருந்ததுபோல்
இன்றும் என்றும் நித்தியமாகவும் - ஆமென்.
 
ஆண்டவரே இரக்கமாயிரும்

ஆண்டவரே இரக்கமாயிரும்!
கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
ஆண்டவரே இரக்கமாயிரும்!
 
உன்னதங்களிலே இறைவனுக்கு

உன்னதங்களிலே இறைவனுக்கு
மாட்சிமை உண்டாகுக!
உலகினிலே நல் மனத்தவர்க்கு
அமைதியும் உண்டாகுக!
புகழ்கின்றோம் யாம் உம்மையே
வாழ்த்துகின்றோம் இறைவனே!
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை
மகிமைப் படுத்துகின்றோம் யாம்.

உமது மேலாம் மாட்சிமைக்காக
உமக்கு நன்றி நவில்கின்றோம்.
ஆண்டவராம் எம் இறைவனே
இணையில்லாத விண்ணரசே!

ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும்
தேவ தந்தை இறைவனே!
ஏக மகனாக ஜெனித்த ஆண்டவர்
இயேசு கிறிஸ்து இறைவனே!

ஆண்டவராம் எம் இறைவனே!
இறைவனின் திருச் செம்மறியே!
தந்தையினின்று நித்தியமாக
ஜெனித்த இறைவன் மகனே நீர்!

உலகின் பாவம் போக்குபவரே,
நீர் எம்மீது இரங்குவீர்!
உலகின் பாவம் போக்குபவரே,
எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்!

தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே,
நீர் எம்மீது இரங்குவீர்!
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே
நீர் ஒருவரே தூயவர்!
நீர் ஒருவரே ஆண்டவர்!
நீர் ஒருவரே உன்னதர்!
பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்
மாட்சியில் உள்ளவர் நீரே.  - ஆமென்!
 
அல்லேலூயா
 
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா!
மெல்லிசைக் கருவிகள் மீட்டிடுவோம்
மேளமும் தாளமும் முழங்கிடுவோம்
நல்லவர் ஆண்டவர் என்றுரைப்போம்
நாளுமே அவரைப் போற்றிடுவோம்.
 
வானமும் பூமியும்

வானமும் பூமியும் படைத்தவராம்
கடவுள் ஒருவர் இருக்கின்றார்;
தந்தை சுதன் தூய ஆவியுமாய்
நம்மில் உறவுடன் வாழ்கின்றார்!

பரிசுத்த ஆவியின் வல்லமையால்
திருமகன் மரியிடம் மனுவானார்;
மனிதரைப் புனிதராய் ஆக்கிடவே
புனிதராம் கடவுள் மனிதரானார்!

பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்,
கல்லறை ஒன்றில் அடக்கப்பட்டார்;
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்,
மரணத்தின் மீது வெற்றி கொண்டார்!

பரலோகம் வாழும் தந்தையிடம்
அரியணை கொண்டு இருக்கின்றார்;
உலகம் முடியும் காலத்திலே
நடுவராய்த் திரும்பவும் வந்திடுவார்!

பரிசுத்த ஆவியை நம்புகிறோம்,
பாரினில் அவர் துணை வேண்டுகிறாம்;
பாவ மன்னிப்பில் தூய்மை பெற்று
பரிகார வாழ்வில் இணைந்திடுவோம்!

திருச்சபை உரைப்பதை நம்புகிறோம்;
புனிதர்கள் உறவை நம்புகிறோம்;
சரீரத்தின் உயிர்ப்பை மறுவாழ்வை
விசுவாசப் பொருளாய் நம்புகிறோம்!

தூய நல் ஆவியாம் இறைவனையும்
தூயவராக்கும் ஒப்புரவையும்
புனிதராம் இயேசுவின் ஆட்சியையும்
புனித நல் வாழ்விற்காய் ஏற்கின்றோம்.
  - ஆமென்!
 
தூயவர்



தூயவர், தூயவர், தூயவர்,
மூவுலகிறைவனாம் ஆண்டவர்!
வானமும் வையமும் யாவும் நும்
மாட்சிமையால் நிறைந்துள்ளன!
உன்னதங்களிலே ஓசான்னா! (2)

ஆண்டவர் திருப்பெயரால்
வருபவர் ஆசீர் பெற்றவரே!
உன்னதங்களிலே ஓசான்னா! (2) 
 
விசுவாசத்தின் மறைபொருள்

குரு
 
இது விசுவாசத்தின் மறைபொருள்
 

இறை மக்கள்

எமக்காக மரித்தீர்
எமக்காக  உயிர்த்தீர்
மீண்டும் வருவீர்
உமக்கே ஆராதனை உமக்கே

ஆராதனை.

இறை மக்கள் (மறு வடிவம்)

கிறிஸ்து மரித்தார்
கிறிஸ்து உயிர்த்தார்
கிறிஸ்து மீண்டும் வருவார்.

அப்பா பிதாவே
 
அப்பா பிதாவே அப்பா பிதாவே
அப்பா பிதாவே பிதாவே.

உம் தூய நாமம் வாழ்கவே,
உம் தூய அரசு வருகவே;
உம் அன்பு எம்மில் பெருகவே,
உம் பண்பு எம்மில் வளரவே.

- அப்பா பிதாவே

விண்ணக வாசிகள் வாழ்வது போல்
மண்ணக மாந்தரும் வாழ்ந்திடுக;
உம் சித்தம் எம்மில் நிறைவேறுக;
உம் திட்டம் எம்மில் பலன் தருக.

- அப்பா பிதாவே

அன்றாட உணவைத் தந்தருளும்;
ஆவியை எம்மேல் பொழிந்தருளும்;
உம்திரு வாக்கை நல் உணவாக
உண்டு மகிழவே செய்தருளும்.

- அப்பா பிதாவே

பிறர் குற்றம் நாங்கள் பொறுப்பதுபோல்
எம் குற்றம் நீரே பொறுத்தருளும்;
சோதனை நின்று எம்மை காத்தருளும்;
சோதிக்கும் சாத்தானை விரட்டிவிடும்.

- அப்பா பிதாவே
 
உலகின் பாவம் போக்கும்

உலகின் பாவம் போக்கும்
இறைவனின் திருச்செம்மறியே,
எம்மேல் இரக்கம் வையும்.

உலகின் பாவம் போக்கும்
இறைவனின் திருச்செம்மறியே,
எம்மேல் இரக்கம் வையும்.

உலகின் பாவம் போக்கும்
இறைவனின் திருச்செம்மறியே,
எமக்கு அமைதி அருளும்.
 
 
 

 
 
 
 

திருப்பலி செபங்கள்

எல்லாம் வல்ல இறைவனிடமும்

எல்லாம் வல்ல இறைவனிடமும்
சகோதரர் சகோதரிகளே உங்களிடமும்
நான் பாவியென்று ஏற்றுக்கொள்கிறேன்.
ஏனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும்
செயலாலும் கடமையில் தவறியதாலும்
பாவங்கள் பல செய்தேன்.
என் பாவமே என் பாவமே என் பெரும் பாவமே!
ஆகையால், எப்பொழுதும் கன்னியான
பரிசுத்த மரியாளையும்
வானதூதர் புனிதர் அனைவரையும்
சகோதர சகோதரிகளே உங்களையும்
நம் தேவனாகிய ஆண்டவரிடம்
எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.

உன்னதங்களிலே கடவுளுக்கு

உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக!

பூவுலகில் நன்மனத்தோர்க்கு அமைதியும் ஆகுக!
உம்மைப் புகழ்கின்றோம், உம்மை வாழ்த்துகின்றோம்,
உம்மை ஆராதிக்கின்றோம், உம்மை மகிமைப்படுத்துகின்றோம்.
உமது மேலான மாட்சிமையின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்.

ஆண்டவராகிய சர்வேசுரா, வானுலக அரசரே,
எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரா!
ஏக சுதனாய்ச் செனித்த ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே!
ஆண்டவராகிய சர்வேசுரா, சர்வேசுரனின் செம்மறியே, பிதாவின் சுதனே,
உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்.

பிதாவின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே பரிசுத்தர்;
நீர் ஒருவரே ஆண்டவர், நீர் ஒருவரே உன்னதர்; பரிசுத்த ஆவியோடு
பிதாவாகிய சர்வேசுரனின் மாட்சிமையில் இருப்பவர் நீரே. 
ஆமென்.

வானமும் பூமியும்

ஒரே கடவுளை விசுவசிக்கின்றேன்.
வானமும் பூமியும் காண்பவை காணாதவை
யாவும் படைத்த எல்லாம் வல்ல பிதா அவரே.
சர்வேசுரனின் ஏக சுதனாய் ஜெனித்த ஒரே ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கின்றேன்.
இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே
பிதாவினின்று ஜெனித்தார்;
கடவுளினின்று கடவுளாக ஒளியினின்று ஒளியாக
மெய்யங் கடவுளின்று மெய்யங் கடவுளாக ஜெனித்தவர்;
இவர் ஜெனித்தவர் உண்டாக்கப்பட்டவர் அல்லர்;
பிதாவோடு ஒரே பொருளானவர்;
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன;
மானிடரான நமக்காகவும் நம் மீட்புக்காகவும்
வானகமிருந்து இறங்கினார்;
பரிசுத்த ஆவியினால் கன்னிமரியிடம் உடல் எடுத்து மனிதன் ஆனார்.
மேலும் நமக்காகப் போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் சிலுவையில் அறையுண்டு
பாடுபட்டு அடக்கம் செய்யப்பட்டார்.
வேதாகமத்தின் படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
வானகத்திற்கு எழுந்தருளி
பிதாவின் வலப் பக்கம் வீற்றிருக்கின்றார்.
ஜீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க
மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கின்றார்.
அவரது அரசுக்கு முடிவு இராது.
பிதாவினின்றும் சுதனினின்றும் புறப்படும்
ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான
பரிசுத்த ஆவியை விசுவசிக்கின்றேன்.
இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக
ஆராதனையும் மகிமையும் பெறுகின்றார்.
தீர்க்கத் தரிசிகளின் வாயிலாக பேசியவர் இவரே.
ஏக பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்தலிக்க
திருச்சபையை விசுவசிக்கின்றேன்.
பாவமன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும்
ஏற்றுக்கொள்கின்றேன்.
மரித்தோர் உத்தானத்தையும்
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும்
எதிர்பார்க்கின்றேன். - ஆமென்.

காணிக்கைப் பாடலுக்குப் பின்

குரு

சகோதர சகோதரிகளே, நாம் அனைவரும் ஒப்புக்கொடுக்கும் இத்திருப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி செபியுங்கள்.

இறை மக்கள்

ஆண்டவர் தமது திருப்பெயரின் புகழ்ச்சிக்காகவும் மகிமைக்காகவும் நமது நன்மைக்காகவும் தமது பரிசுத்த திருச்சபை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையினின்று இப்பலியை ஏற்றுக் கொள்வாராக.

தூயவர்

தூயவர் தூயவர் தூயவர்
மூவுலகிறைவனாம் ஆண்டவர்.
வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஓசான்னா!
ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசி பெற்றவரே;
உன்னதங்களிலே ஓசான்னா!
விசுவாசத்தின் மறைபொருள்


இது விசுவாசத்தின் மறைபொருள்.

ஆண்டவரே, தேவரீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பையும் எடுத்துரைக்கின்றோம்.

கிறிஸ்து கற்பித்த செபம்

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக;
உம்முடைய இராச்சியம் வருக;
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல
பூலோகத்திலும்  செய்யப்படுவதாக.

எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களை சோதனையில் விழவிடாதேயும்,
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

ஆமென்.

உலகின் பாவம் போக்கும்

உலகின் பாவம் போக்கும்
இறைவனின் செம்மறியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே,
எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.

ஆண்டவரே தேவரீர் என்னிடம் எழுந்தருள

ஆண்டவரே தேவரீர் என்னிடம் எழுந்தருள நான் தகுதியற்றவன்(ள்).
ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும்; என் ஆன்மா குணமடையும்.

மூவேளை செபம்

ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார்.
தூய ஆவியால் அவள் கருத்தாங்கினாள்.

           - அருள்நிறை .....

இதோ ஆண்டவரின் அடிமை.
உமது சொற்படியே எனக்கு ஆகட்டும்.

           - அருள்நிறை .....

வாக்கு மனிதனானார்.
நம்மிடையே குடிகொண்டார்.

           - அருள்நிறை .....

கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி,
இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக:

இறைவா உம் திருமகன் மனிதனானதை உம்முடைய வானதூதர் வழியாக அறிந்து இருக்கின்றோம். அவருடைய பாடுகளினாலும் மரணத்தினாலும் நாங்கள் உயிர்ப்பின் மகிமை பெற உமது அருளைப் பொழிவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.  ஆமென்.

சுருக்கமான மனத்துயர் செபம்

சுருக்கமான மனத்துயர் செபம்

என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர். எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லை என்று  உறுதி கூறுகிறேன்.  ஆமென்.